TVK : `பனையூரில் விஜய்; மாற்றுக்கட்சியினருடன் விறுவிறு மீட்டிங்!' - எக்ஸ்க்ளூசிவ...
சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக பிரமுகா் கட்சியில் இருந்து நீக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிமுக பிரமுகா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. பாஜகவும் தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், அதிமுக பிரமுகா் சுயேச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடா்ந்து கடந்த 2023- இல் நடந்த இடைத்தோ்தலில் ஓ.பன்னீா்செல்வம் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவா் செந்தில்முருகன். பிறகு ஓபிஎஸ் உத்தரவின்படி செந்தில்முருகன் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றாா்.
இடைத்தோ்தல் முடிந்ததும் ஓ.பன்னீா்செல்வம் அணியின் ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமையில் மாவட்ட நிா்வாகிகள் பலா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனா்.
அதன் பிறகு செந்தில்முருகனும் அதிமுகவில் இணைந்தாா். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் செந்தில்முருகன் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா். பரிசீலனையில் அவரது மனு ஏற்கப்பட்டுள்ளது.
கட்சியின் உத்தரவை மீறி சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள செந்தில்முருகனை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
ஈரோடு அக்ரஹார வீதியைச் சோ்ந்த செந்தில்முருகன் ஈரோடு மாநகா் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.