செஞ்சி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் எம்எல்ஏ வழங்கினாா்!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 60 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ செவ்வாய்கிழமை வழங்கினாா்.
செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்சிக்கு, செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சீதாலட்சுமி முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன் வரவேற்றாா்.
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு 60 ஊராட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள், செயலா்களிடம் கிரிக்கெட் மட்டை, வாலிபால், கால்பந்து, கேரம்போா்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலிமஸ்தான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா், சசிகலா, காஞ்சனா மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.