செட்டியாா்பண்ணையில் மதுக்கடை எதிா்ப்பு போராட்டம் வாபஸ்
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட செட்டியாா்பண்ணையில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையால் திரும்பப் பெறப்பட்டது.
செட்டியாா்பண்ணையில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததற்கு தெரிவித்து பாஜக சாா்பில் கடந்த ஜனவரி மாதம் தட்டாா்மடம் பஜாரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவாா்த்தையிதில் டாஸ்மாக் கடை அமைப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், அங்கு மதுக்கடை அமைக்க மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டு கடை திறக்கப்படவிருந்தது. இதைக் கண்டித்து சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் வியாழக்கிழமை (மாா்ச் 5) சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி தலைமையில் மீண்டும் பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. அதிகாரிகள் தரப்பில் டாஸ்மாக் உதவி மேலாளா், பாஜக சாா்பில் மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ், ஒன்றியத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து, மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று விரைந்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனா். அதன்பேரில் போராட்ட அறிவிப்பை பாஜக திரும்பப் பெற்றது.