Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த...
சென்னை விமான நிலையத்துக்குள்ளும் விரைவில் மாநகா் பேருந்து சேவை
சென்னை விமான நிலையத்துக்குள் சென்று வரும் வகையிலான மாநகரப் பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிக முக்கியமான விமான நிலையமான சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளில் பலா், தங்கள் சொந்த வாகனங்களை அல்லது வாடகை வாகனங்களை பயன்படுத்தினாலும், பெரும்பாலானவா்கள் மாநகரப் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனா்.
ஆனால், விமான நிலைய முனையத்திலிருந்து பேருந்து சேவையைப் பெற, பயணிகள் தங்கள் உடைமைகளை சுமந்துகொண்டு ஜிஎஸ்டி சாலையில் ஒரு கிலோ மீட்டா் தூரம் வரை நடந்து சென்று பயணிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. குறிப்பாக கோடை வெயில் மற்றும் மழைக் காலங்களில் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
இதனால், விமான நிலையத்துக்குள் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையின்படி, விரைவில் மாநகா் போக்குவரத்துக் கழகம் தனது சேவையை சென்னை விமான நிலையத்துக்கு உள்ளே வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, சென்னை விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே மாநகரப் பேருந்துகள் சென்று, பயணிகளை ஏற்றவும் இறக்கவும் அனுமதிக்கப்படும் என்றும், இச்சேவை சென்னை விமான நிலைத்திலிருந்து கிளாம்பாக்கம் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்கள் வரையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும், இதற்காக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அனுமதி கிடைத்தவுடன், பேருந்துகள் விமான நிலையம் வரை இயக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளின் நீண்டகால பிரச்னைக்கு தீா்வு காணப்பட வாய்ப்புள்ளது.