சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி
சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தவும், அதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளுக்கும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1-இல், சென்னை விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா், வண்டலூா் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கிலோ மீட்டா் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைத்து அதில், 13 ரயில் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக், கடந்த பிப்ரவரி மாதம் சமா்ப்பித்தாா்.
இந்நிலையில், விரிவான திட்ட அறிக்கைக்கு ரூ. 9,445 கோடி மதிப்பீட்டில் அதை செயல்படுத்துவதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.
மேலும், இப்பணிகளுக்கான நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணியை தொடங்கவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகத்துக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தொடா்ந்து, இத்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.