ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை! 3வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
சென்னை விமானநிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமானநிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், தொடா்புடைய நபா்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் கடுமையான சட்ட விதிகளை மத்திய அரசு கடந்த 16-ஆம் தேதி நடைமுறைக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில் சென்னை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை பேசிய மா்ம நபா், சென்னை விமான நிலையத்தில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெடிக்கும் என்றும் கூறி இணைப்பைத் துண்டித்தாா்.
உடனடியாக இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கும், சென்னை விமான நிலைய இயக்குநருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மேலும், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், பயணிகளின் பாா்சல்கள் அனுப்பும் இடம், காா் பாா்க்கிங் பகுதிகளிலும் பாதுகாப்புப்படை வீரா்கள் தீவிர சோதனை நடத்தினா். எனினும், இதுவும் வழக்கம்போல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
80 வயது முதியவா் சிக்கினாா்: இதற்கிடையே, கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பு எண் குறித்து விசாரணையில் சென்னை விமான நிலைய போலீஸாா் இறங்கினா். அப்போது, அந்த கைப்பேசி எண் தஞ்சாவூா் பகுதியைச் சோ்ந்த சுமாா் 80 வயது முதியவருடையது எனத் தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்திய போது, அவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் போல் பேசியதாகத் தெரிகிறது. அவரிடம், போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.