பாதுகாப்புப் பணியில் 8,000 போலீஸாா்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 8,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சென்னையில் உள்ள சுமாா் 350 தேவாலயங்களை சுற்றிலும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். முக்கியமாக சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகா் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியாா் தேவாலயம், அண்ணாசாலை புனித ஜாா்ஜ் தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் பெண் காவலா்கள், குற்றப்பிரிவு காவலா்கள் சாதாரண உடையில் கண்காணிக்கின்றனா். இது தவிர கண்காணிப்பு கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மெரீனா, பெசன்ட் நகா், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்லும் பொதுமக்களை கடலில் இறங்காத வண்ணம் தடுக்கவும் அப்பகுதிகளில் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.
தீவிர வாகன சோதனை: அதேபோல சென்னை முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், இருசக்கர வாகனப் பந்தயம், அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, மதுபோதையில் வாகனங்களை இயக்குவது, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.