சென்னையிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்
சென்னையிலிருந்து பம்பை வரையிலான விரைவு பேருந்துகளின் சிறப்பு இயக்கத்தை விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கேரள மாநிலம், சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயிலுக்குஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தா்கள் சென்றுவர ஏதுவாக முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நிகழாண்டு நவ.15 முதல் 2025 ஜன.16 வரை சென்னை (கோயம்பேடு, கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூா் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிா்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, கோயம்பேடு, கிளாம்பாக்கத்திலிருந்து பம்பைக்கு இயக்கப்படும் பேருந்துகளை விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘பேருந்து இருக்கைகளை ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் எனும் இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச.27 முதல் டிச.30 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் டிச.26 முதல் 29-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு 94450 14452, 94450 14424, 94450 14463 எனும் கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.