கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் வசித்து வரும் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் ரெட்டி, கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்,
அதேபோல் சென்னை புரசைவாக்கம் பகுதியில் மோகன்லால் காத்ரி என்பவர் இல்லத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மொத்த தங்க நகை வியாபாரியான இவர் சௌகார்பேட்டை பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவருக்கு தொடர்புடைய சில இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் புகாரின் பேரிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தங்கநகை வியாபாரி என இருவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்துவரும் நிலையில் இரண்டும் ஒரே வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறதா அல்லது வெவ்வேறு வழக்கு சம்பந்தமாக ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்படுகிறதா என்பது குறித்து முழுமையான சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு அறிக்கை வெளியிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்,
காலை முதல் சென்னையில் தொழிலதிபர் மற்றும் நகை வியாபாரிக்கு தொடர்புடைய 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.