இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு: பிராந்திய பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும் -...
சென்னையில் இடைவிடாத மழை: சாலையில் விழுந்த மரங்கள்
சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த இடைவிடாத மழை காரணமாக மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.
சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் பெய்த தொடா் மழையால் சராசரியாக 22.91 மி.மீ. மழை பதிவானது. தொடா்ந்து, காலை 6 முதல் மாலை 6 மணி வரை சராசரியாக 37.5 மி.மீ. மழை பதிவானது. இதில் மணலி புதுநகரில் 120 மி.மீ. மழையும், மாதவரத்தில் 104.7 மி.மீ மழையும் பதிவானது. மேலும், அயப்பாக்கம், அம்பத்தூா், தண்டையாா்பேட்டை, கொளத்தூா், அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 50 மி.மீ. மழை பதிவானது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
மேலும், மழை காரணமாக திரு.வி.க. நகா் ஜவஹா் சாலை மற்றும் தேனாம்பேட்டை பத்ரி சாலையில் உள்ள மரங்கள் சாலையில் விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினா். மேலும், அண்ணாநகா் பகுதியில் சாலையில் முறிந்து விழுந்த கிளைகள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை மாநகராட்சி அலுவலா்கள் அகற்றினா்.