"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிக...
சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் 'வேல் யாத்திரை' பேரணி நடத்த இந்து முன்னணி அமைப்பு அனுமதி கோரியது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாரத் இந்து முன்னணி அமைப்பு, பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், "திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு? திருப்பரங்குன்றம் மலையைக் காக்க, சென்னையில் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன? தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்கப் பார்க்கிறீர்கள்" எனக் கடும் கண்டனம் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பாரத் இந்து முன்னணி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்று நீதிபதி பெலா திரிவேதி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது, இதில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.