ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி: முதல்வர், அமைச்சர்கள் உயரதிகாரிகள் பங்கேற...
ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!
உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் திருத்தேரில் வீதி உலா வந்து எம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இறுதி வரை வடம் இழுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மட்டுமல்ல அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல்வேறு சிறப்பு வாய்ந்த திருத்தலங்கள் அமைந்துள்ளது. அவ்வகையில் உத்திரமேரூர் பகுதியில் ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் மிகவும் புகழ்பெற்றது. இந்த திருக்கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் காலை, மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அவ்வகையில் இன்று ஏழாம் நாள் அதிகாலை 5 மணி அளவில் திருக்கோயிலிலிருந்து பஞ்சவர்ணம் மாலைகளுடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத்தொடர்ந்து ஆறு மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கத் தேர் பல்வேறு வீதிகள் வழியாகச் சென்று பக்தர்களுக்கு எம்பெருமாள் அருள்பாலித்தார்.
இத்திருத்தேரினை 95 சதவீத பெண் பக்தர்கள் கலந்துகொண்டு துவக்கம் முதல் இறுதி வரை வடம் பிடித்து எம்பெருமாளுக்கு சேவை செய்தது மகிழ்ச்சி ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சூடம் ஏற்றி வழி நெடுகிலும் பெருமாள் சேவை கண்டு இறையருள் பெற்றனர்.