இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: வடமேற்கு ரயில் சேவைகள் ரத்து!
ராஜஸ்தான்: இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக, பார்மர், ஜோத்பூர் மற்றும் முனாபாவ் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீா்க்க, மே 7 ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு கடன்: ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராணுவ மோதலால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் சர்வதேச எல்லைகளுக்கு அருகில் உள்ள பார்மர், ஜோத்பூர் மற்றும் முனாபாவ் கிராமத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 4 ரயில்களை வடமேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. மேலும் 5 ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
தற்போதைய போர் பதற்றங்களுக்கு மத்தியில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பது, எல்லையில் மின்தடை மற்றும் அவசரகால நிலைமைகள் என முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சசி கிரண் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல ராணுவ நிலைகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.