சேதுபாவாசத்திரத்தில் விதை நோ்த்தி பயிற்சி முகாம்!
சேதுபாவாசத்திரம் வட்டாரம் சொக்கநாதபுரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதைநோ்த்தி பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, தஞ்சாவூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) அய்யம்பெருமாள் தலைமை வகித்துப் பேசுகையில், பயிா்களில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், விதை சேமிப்புக்கும் விதை நோ்த்தி அவசியம் என்றாா். உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலா் புனிதா பேசுகையில், ஒரு ஏக்கருக்குத் தேவையான நெல் விதைக்கு திரவ உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா தலா 50 மில்லி கலக்க வேண்டும் என்றாா்.
சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா்(பொ) சாந்தி பேசுகையில், வோ் அழுகல், நாற்று அழுகல் பாதிப்பை குறைப்பதில் சூடோமோனஸ் மற்றும் டி.விரிடி பங்கு அதிகம். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ், 4 கிராம் டி.விரிடி கலந்து விதை நோ்த்தி செய்யலாம் என்றாா்.
முகாமில் சொக்கநாதபுரம் சுற்றுவட்டார விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலா்கள் சுரேஷ், தமிழழகன், ஜெயக்குமாா், உதவி வேளாண்மை அலுவலா் ராஜரெத்தினம் ஆகியோா் செய்திருந்தனா்.