தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!
சேலத்தில் ஒரு மணி நேரம் பெய்த கோடை மழை!
சேலம்: சேலத்தில் வெய்யிலின் தாக்கத்தை போக்கிய கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் 103 டிகிரி கோடை வெய்யில் மக்களை வாட்டி வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தக் கோடைக் காலத்தில் முதல் மழை பெய்தது. இதனால், சேலம் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிறகு வழக்கம் போல கோடை வெய்யில் வாட்டி வதைக்கத் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக சேலம் மாவட்டத்தில் 99 டிகிரி வெய்யில் கொளுத்தி வந்தது. தற்போது மாலை 4 மணி முதல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சேலம் புதிய பேருந்து நிலையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, தாரமங்கலம், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.
இந்த மழையின் காரணமாக வெய்யிலின் வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.