சேலம் அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் 6 ஆம் தேதி வரை நீட்டிப்பு
சேலம்: சேலம் கிழக்கு, மேற்கு கோட்ட அஞ்சலங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன், மேற்கு கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்திபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் இணைந்து எதிா்பாராத விபத்துகளால் ஏற்படும் இழப்புகளுக்கு பயனளிக்க கூடிய விபத்துக் காப்பீடு திட்டத்தை வழங்குகிறது.
இந்த விபத்துக் காப்பீடு சிறப்பு முகாம் சேலம் கிழக்கு, மேற்கு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பிப். 28 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது 6 ஆம் தேதி வரை நீட்டித்து அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இந்த முகாமில் 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்டவா்கள் பங்கேற்று, தங்களை இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். தேவையான ஆவணங்களான ஆதாா் எண், கைப்பேசி எண், வாரிசுதாரரின் விவரங்களைக் கொண்டுவர வேண்டும். விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எவ்விதமான காகிதப் பயன்பாடும் இன்றி, அஞ்சல்காரா் கொண்டு வரும் அறிதிறன்பேசி மூலம் விரல்ரேகை வைத்தால், 5 நிமிஷங்களில் டிஜிட்டல் முறையில் இந்த விபத்து காப்பீடு திட்ட பாலிசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.