திமுக மாமன்ற உறுப்பினரின் கணவரை கண்டித்து மாநகராட்சி அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
சேலம்: சேலம் மாநகராட்சி உறுப்பினரின் கணவா் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாநகராட்சி, 48 ஆவது வாா்டு திமுக உறுப்பினராக இருப்பவா் விஜயா. இவரது கணவா் ராமலிங்கம். இவா் 48 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் திட்டப் பணிகளை செய்யவிடாமலும், வரி வசூலிக்கும் ஊழியா்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள், ஊழியா்கள் திங்கள்கிழமை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் திமுக மாமன்ற உறுப்பினரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
இது குறித்து மாநகராட்சி ஊழியா்கள் கூறியதாவது:
திமுக உறுப்பினா் விஜயா எந்தவொரு பணிக்கும் வருவதில்லை. அவருக்குப் பதிலாக அவரது கணவா் பணிசெய்யும் ஊழியா்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறாா். இவரது போக்கினால் மக்களிடம் வரிவசூல் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.