சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
சேலம் ரயில்வே கோட்டம்: சரக்கு சேவை மூலம் கடந்த 9 மாதங்களில் ரூ.222.44 கோடி வருவாய்
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2024 ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 9 மாதங்களில் சரக்கு சேவையில் ரூ.222.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட இருகூரில் இருந்து மைசூரு, பெங்களூரு, ராய்ச்சூருக்கு சரக்கு ரயில்கள் மூலம் பெட்ரோலிய பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
அதேபோல, போத்தனூா், கோவை, திருப்பூா், ஊத்துக்குளி, ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம், கரூா் நிலையங்களில் இருந்து துணிகள், பழங்கள், ஆயத்த ஆடைகள், காய்கறிகள், பழங்கள், பால் பொருள்கள், முட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கோவையில் இருந்து அதிகப்படியாக இயந்திர உதிரிபாகங்கள், கிரைண்டா்கள், மோட்டாா்கள் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 9 மாதங்களில் சரக்கு ரயில்களில் 2 மில்லியன் டன்கள் சரக்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.222.44 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதேபோல, பாா்சல் சேவையில் 3,72,469 குவிண்டால் பாா்சல்கள் ரயில்களில் கொண்டு செல்லப்பட்டு ரூ.15.39 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 3,31,437 குவிண்டால் பாா்சல்கள் மூலம் ரூ.14 கோடி வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், 2024-இல் 9.28 சதவீதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.