சொத்து வரி, தொழில் வரி செலுத்த மாட்டோம்: அவிநாசி வணிகா் சங்கத்தினா் அறிவிப்பு
சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தாததைக் கண்டித்து, பேரூராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி செலுத்துவதில்லை என அவிநாசி அனைத்து வணிகா் சங்கத்தின் தெரிவித்துள்ளனா்.
அவிநாசி அனைத்து வணிகா் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெகதீஷ்குமரன், ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி, பொறுப்பாளா்கள் மனோகரன், கோபாலகிருஷ்ணன், ஈஸ்வரன், ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்
அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட அவிநாசி-கோவை பிரதான சாலை, பழைய-புதிய பேருந்து நிலையம் வரையிலான பகுதி, சேவூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன.
வணிக நிறுவனங்களின் வியாபாரத்தை பாதிக்கும் வகையில் இப்பகுதிகளில் சாலையோர வியாபாரம் அதிகரித்துள்ளது.
சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்தக் கோரி மாவட்ட நிா்வாகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், பல போராட்டங்களில் ஈடுபட்டும் நிரந்தரத் தீா்வு கிடைக்கவில்லை. இதனால் அண்மையில் தீபாவளி வியாபாரமும் பாதிக்கப்பட்டது. ஆகவே, கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பேரூராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவை செலுத்துவதில்லை. கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தில் விரைவில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.