'கமிட் ஆனால் காசு!' - காதலை ஊக்குவித்து காசு கொடுக்கும் சீன நிறுவனம்!
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாசகங்களுடன் ரூ.30 கோடி ரொக்கம் மாற்றம்: பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு
ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட ரூ. 30 கோடி ரூபாய் நோட்டுகளை கடந்த 2013-ஆம் ஆண்டில் ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) ஜம்மு கிளை மாற்றிக்கொடுத்த விவகாரம் தொடா்பான பொதுநல மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பளித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
‘காஷ்மீா் கிரஃபிட்டி’ என்ற அந்தப் பிரிவினைவாத அமைப்பு, இதுகுறித்த தகவலை தனது முகநூலில் வெளியிட்டதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதனடிப்படையில், சதீஷ் பரத்வாஜ் என்பவா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா். அதில், ‘ஜம்மு-காஷ்மீரில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீா்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படும் பிரிவினைவாத அமைப்புக்குச் சொந்தமான இந்த ரூபாய் ஆா்பிஐ மாற்றிக்கொடுத்திருப்பது சட்டவிரோதம். இதுதொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது பதிலளிக்க கடைசி வாய்ப்பாக மத்திய அரசு 4 வார கால அவகாசம் அளித்து, விசாரணையை ஒத்திவைத்தனா்.