ஜம்மு-காஷ்மீா், லடாக் குறித்த புத்தகம் - அமைச்சா்கள் அமித் ஷா, பிரதான் இன்று வெளியீடு
‘ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்: த்ரூ தி ஏஜஸ்’ என்ற புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் வியாழக்கிழமை (ஜன.2) வெளியிட உள்ளனா்.
‘இந்த புத்தகம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லாக்கின் 3,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை உள்ளடக்கிய 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நிபுணா்கள் மட்டுமல்லாமல் பொது வாசகா்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது.
புத்தகத்தில் உள்ள விளக்கப்படங்கள் அனைத்தும் ஒவ்வொரு காலகட்டத்தையும், இந்திய வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கவனமாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ மற்றும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்த புத்தகம் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கிடைக்கிறது’ என மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.