`StartUp' சாகசம் 38: `முதுகுவலிக்காக ஒரு ஸ்டார்ட்அப் தொடங்கியது ஏன்?’ - அ. முகமத...
ஜான் பாண்டியனுக்கு 'அசைன்மென்ட்' - ரூட் போடும் பா.ஜ.க!
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு, அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் பகுதியில் சமீபத்தில் நடந்தது. கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் ஜான் பாண்டியனின் மனைவியுமான பிரசில்லா பாண்டியனின் முன்னிலையில் நடைபெற்ற 'சமூக சமத்துவ மாநாட்டில்', தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் சமூக அட்டவணையில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், ஜான் பாண்டியனுக்கு சில ஸ்பெஷல் அசைன்மென்ட்டுகளை பா.ஜ.க மேலிடம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதுகுறித்து, மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற நயினாரும் ஜான்பாண்டியனும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

'சோஷியல் இன்ஜினியரிங்'
அந்த 'அசைன்மென்ட்' குறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள் சிலர், "வரும் சட்டமன்றத் தேர்தலில், சமூகரீதியாக வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு பெரும் திட்டத்தையே தீட்டியிருக்கிறது டெல்லி. 'சோஷியல் இன்ஜினியரிங்' முறையில், குறிப்பிட்ட சில சமூக வாக்குகளை மட்டும் குறிவைத்து களமாடுவது பா.ஜ.க-வின் வட இந்திய தேர்தல் வியூகம். அதை தமிழகத்திலும் அமல்படுத்தத்தான் ஜான் பாண்டியனைக் கையில் எடுத்திருக்கிறது டெல்லி.
வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கிடு சட்டமசோதாவை அ.தி.மு.க கொண்டுவந்ததால், அக்கட்சியின் பக்கம் வன்னியர் சமூகத்தினர் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க இணையும் பட்சத்தில், வன்னியர் சமூக வாக்குகளை திரளாகவே ஒருங்கிணைக்க முடியும். அதேபோல, முக்குலத்தோர் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முதலியார் சமூக வாக்குகளைக் கவர புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், நாடார் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்க நடிகர் சரத்குமாரில் தொடங்கி தமிழிசை வரையில் பல தலைவர்களையும் களமிறக்க ஆயத்தமாகிறது பா.ஜ.க மேலிடம். அந்த வகையில், தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஜான் பாண்டியன் வசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜான் பாண்டியனிடம் இரண்டு திட்டங்கள் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று, பட்டியல் சமூக வெளியேற்றத்தை முன்னிறுத்தி, தென்மாவட்டங்கள் முழுவதும் அவர் தொடர் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். அந்த விவகாரத்தை பொதுவெளியில் பேசுவதற்கு தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சிகள் தயாராக இல்லாத நிலையில், ஜான் பாண்டியன் பிரசாரம் செய்தால் தாக்கத்தை உருவாக்கலாம்.
இரண்டாவதாக, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கு மத்திய அரசு செய்துக் கொடுத்துள்ள நலத்திட்டங்கள் குறித்தும், 'நரேந்திரன்... தேவேந்திரன்...' என பிரதமர் மோடி பேசியது குறித்தும், பிரசார இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டு அசைன்மென்ட்டுகளையும் ஜான்பாண்டியனுக்கு அளித்து களமிறக்கியிருக்கிறது பா.ஜ.க. அவரும்கூட, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல் என தென்மாவட்டங்கள் முழுவதும் விரைவிலேயே சுற்றுப்பயணம் செல்வதற்குத் தயாராகிறார்" என்றனர்.

திண்டுக்கல் மாநாட்டில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழத்திற்கு ஐந்து சீட்டுகள் வரையில் ஒதுக்குவதற்கு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்திருக்கிறாராம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஏழு தொகுதிகளில் டெபாஸிட்டை பறிகொடுத்தது அ.தி.மு.க. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி என நான்கு தொகுதிகள் அதில் அடக்கம். முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் அ.தி.மு.க கூட்டணிக்கு விழாததாலேயே டெபாஸிட் பறிபோனதாக, இலைக்கட்சி வட்டாரத்திலேயே பெரியளவில் விமர்சனங்கள் எழுந்தன. அதை ஈடுகட்டுவதற்காகவே, ஜான் பாண்டியனுடன் சேர்த்து தினகரன், நயினார் நாகேந்திரன், சரத்குமார் என தென்மாவட்டங்களில் வி.ஐ.பி-க்களை களமிறக்க வியூகம் வகுத்திருக்கிறதாம் பா.ஜ.க.
இந்த வியூகம் எடுபடுகிறதா என்பது போகப்போகத் தெரியும். !