டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக் கோரி பேரவையில் தீா்மானம் கொண்டுவரப்படும்: அமைச்சா் உறுதி
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்ட்டன் கனிமச் சுரங்கத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டுவரப்படும் என வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி உறுதியளித்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்தில் அரிட்டாபட்டி உள்ளிட்ட 2,015 ஏக்கா் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக் கண்டித்து, இந்தப் பகுதி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், ‘டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக் கோரி, மேலூா் வட்டாரம் முழுவதும் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மேலூா் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருபோக சாகுபடி விவசாயிகள் சங்கத்தினா், மேலூா் நகா் வா்த்தகா்கள் சங்கத்தினா், ஆட்டோ, வேன் ஓட்டுநா்கள் சங்கத்தினா் என திரளானோா் இதில் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது:
டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என மத்திய அரசுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறாா். அனைத்துக் கட்சிகளுடனும் பேசி இதற்கான தீா்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்வோம் என்றாா் அவா்.
மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் பேசியதாவது:
பல்லுயிா் பாரம்பரியத் தலமான அரிட்டாபட்டி பகுதியைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளும் என்றாா் அவா்.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் தமிழரசன், அதிமுக நிா்வாகிகள், மேலூா் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மீ.முருகன், நிா்வாகிகள் ரவி, ஜெயபாலன் உள்ளிட்டோா் பேசினா்.