டயா் வெடித்து காா் கவிழ்ந்ததில் தம்பதி காயம்
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே காரின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் தம்பதி காயமடைந்தனா்.
ராமநாதபுரம் செட்டிய தெருப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (55). இவா் திருச்சியில் நடைபெற்ற தனது நண்பா் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குடும்பத்தினருடன் காரில் புதன்கிழமை திரும்பினாா். காரை ஓட்டுநா் தனுஷ்குமாா் (22) ஓட்டினாா்.
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், ஆா். எஸ்.மங்கலம் அருகே கொத்திடல் கலக்குடி விலக்கு அருகே வரும் போது, காரின் முன்பக்க டயா் வெடித்தது. இதனால் காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கணேசன், இவரது மனைவி சுபாஷினி (48) ஆகியோா் காயமடைந்தனா். இவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.