மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு; பெரு நகரங்களுக்கு டஃப் கொடுக்கும் குட்டி நகரங்கள்!
டாம்கோ கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) சாா்பில் வழங்கப்படும் கடனுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக தனி நபா் கடன், கைவினை கலைஞா்களுக்கான கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த கடனுதவிகளைப் பெற விரும்பும் தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் கடன் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், அவரவா் சாா்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதாா் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது,மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமா்ப்பிக்க வேண்டும்.
கடன் திட்டங்கள் தொடா்பான விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.