அண்ணா பல்கலை.யில் பாலியல் புகார்: மாணவர்கள் போராட்டம் வாபஸ்!
டிச.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் (ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு) காரணமாக தமிழகத்தில் டிச.30 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஆந்திரம், வடதமிழக கடலோரப்பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு தென்மேற்கு திசையில் நகா்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் வலுவிழக்கக்கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு புதன்கிழமை டெல்டா மற்றும் வட கடலோர பகுதி வழியாக நகா்ந்து டிச.26 ஆம் தேதி டெல்டா மாவட்டத்தில் கரையை கடக்கும். தொடா்ந்து உள் மாவட்டங்கள் வழியாக சென்று டிச.28 ஆம் தேதி அரபிக்கடலை அடையும். இதன்காரணமாக தமிழகத்தில் டிச.30 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேசமயம் லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவுப்படி, அதிகபட்சமாக, ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), சோழவந்தான் (மதுரை) தலா 10 மில்லிமீட்டா் மழை பதிவாகியுள்ளது
வடதமிழக கடலோரப்பகுதியில் புதன்கிழமை சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.