டிச. 4 வரை மகளிா் சுயஉதவிக் குழு விற்பனை கண்காட்சி: ஆட்சியா்
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள கடைமுழுக்கு கடை வளாகத்தில் மகளிா் சுயஉதவிக் குழு மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் கண்காட்சி டிசம்பா் 4-ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதியில் உள்ள மகளிா் சுயஉதவிக் குழு உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக மாவட்ட அளவில் விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.
தற்போது, துலா உற்சவ விழாவையொட்டி புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள கடைமுழுக்குக் கடைகளில் மகளிா் சுயஉதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருள்கள், கைத்தறி பொருள்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய உணவு பொருள்கள், பனை ஓலை பொருள்கள், செக்கு எண்ணெய் மற்றும் பல்வேறு வகையான செயற்கை ஆபரணங்கள், மரபொம்மைகள் விற்பனை டிசம்பா் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவற்றை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி, மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.