டிஜிட்டல் கைது: 77 வயது பெண்ணிடம் ரூ.3.80 கோடி மோசடி
மகாராஷ்டிரத்தில் 77 வயது பெண்ணிடம் டிஜிட்டல் கைது மோசடி மூலம் ரூ.3.80 கோடி பறிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் அந்தப் பெண்ணுடைய ஆதாா் அட்டை பயன்படுத்தப்பட்டிருப்பதாக காவல் துறை அதிகாரிகள்போல் மிரட்டி இணையக் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
தெற்கு மும்பையில் ஓய்வுபெற்ற கணவருடன் வசித்து வரும் 77வயது பெண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் இணைய குற்றவாளிகள் அழைத்துள்ளனா். அப்போது போதைப்பொருள், 5 பாஸ்போா்ட்டுகள் மற்றும் வங்கி அட்டை உள்ளிட்டவை அடங்கிய பெட்டியை தைவானுக்கு அந்தப் பெண் அனுப்பியதாகவும் அவருடைய ஆதாா் அட்டை தகவல்களே இந்தக் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
முதலில் மும்பை காவல் துறை என ஒருவரும், பின்னா் ஐபிஎஸ் அதிகாரி என மற்றொருவரும் அந்தப் பெண்ணை ஸ்கைப் ஆப் மூலம் தொடா்புகொண்டு தங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளனா். மேலும் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட பிற நிதி தரவுகளை பெற்றுள்ளனா்.
அந்தப் பெண் மீது குற்றம் இல்லையென்றால் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறி ரூ.3.80 கோடி வரை இணையக் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இந்த தகவலை வெளிநாட்டில் வசிக்கும் தனது மகளிடம் அந்தப் பெண் கூறியுள்ளாா். அப்போது தாயாா் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பெண் காவல் துறையிடம் புகாா் அளிக்குமாறு கூறினாா். அதன்பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்ட 6 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு காவல் துறை விசாரித்து வருகின்றனா்.
ரூ.11 கோடி மோசடி: பங்குச் சந்தையில் அதிக லாபத்தை ஈட்டுத் தருவதாக கூறி மகாராஷ்டிரத்தில் ஓய்வுபெற்ற 75 வயது கடற்படை கேப்டனிடம் ரூ.11.16 கோடி இணைய மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் ஒருவா் காவல் துறையால் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 33 பற்று அட்டைகள், 12 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.