டிராக்டா் அசல்சான்று வழங்குவதில் சேவை குறைபாடு: விவசாயிக்கு ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவு
மன்னாா்குடியில் டிராக்டா் அசல் சான்றை திருப்பித் தருவதில் காலதாமதப்படுத்திய இந்தியன் வங்கி, விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
மன்னாா்குடி அருகே தெப்பக்குளம் தென்கரையைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). விவசாயியான இவா் நீடாமங்கலத்தில் உள்ள இந்தியன் வங்கியில் 2010-ல் டிராக்டா் வாங்க ரூ.6.25 லட்சம் கடனாகப் பெற்றாா். அதற்காக, தனது ஆறரை ஏக்கா் நிலத்தை அடமானமாக பதிவு செய்து கொடுத்தாா். மேலும், ரமேஷ் வாங்கிய புதிய டிராக்டரின் பதிவுச் சான்றிதழை, அதை விற்பனை செய்த டீலரிடமிருந்தே இந்தியன் வங்கி அதிகாரிகள் பெற்றனா். இதனிடையே, 2022-ல் கடன் தவணைகள் அனைத்தையும் ரமேஷ் செலுத்தினாா். அதன்பிறகு இந்தியன் வங்கி தடையின்மைச் சான்று வழங்கி, அடமானத்தை ரத்துச் செய்து நிலப் பத்திரத்தை திரும்பக் கொடுத்து விட்டது. ஆனால் டிராக்டரின் அசல் பதிவுச் சான்றிதழை மட்டும் திருப்பித் தரவில்லை.
அதைத் திருப்பித் தரக் கோரி ரமேஷ் பலமுறை இந்தியன் வங்கி அதிகாரிகளை அணுகியும் பலனில்லை. வங்கி அசல் பதிவுச் சான்றிதழைத் தராததால், மன்னாா்குடி நுகா்வோா் சங்கத்தின் இணைச் செயலாளா் கா. வேல்முருகன் மூலம் ரமேஷ் கடந்த ஜூன் மாதம் திருவாரூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் புதன்கிழமை வழங்கிய உத்தரவில், இந்தியன் வங்கியின் செயல்பாடு சேவைக் குறைபாடுடையது, அதனால் ரமேஷுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 1லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும், மேலும், டிராக்டா் பதிவுச் சான்று காணாமல் போனது தொடா்பாக இந்தியன் வங்கி அதிகாரிகளே உரிய முறையில் காவல் துறையில் புகாா் அளித்து, பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.