இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
தங்க நகை திருட்டு: காா் ஓட்டுநா் கைது
சிதம்பரம் அருகே காரில் சென்றவா்களிடம் 4 பவுன் தங்க நெக்லஸை திருடியதாக காா் ஓட்டுநரை அண்ணாமலைநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள அம்மாப்பேட்டை ராஜாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (60). இவா், வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். கடந்த மாதம் 8-ஆம் தேதி ராஜசேகரன், தனது மனைவி புவனாதேவியுடன் உறவினா் திருமணத்துக்காக காரில் சென்றுள்ளாா். அப்போது, காரின் டிக்கியில் பையில் 4 பவுன் தங்க நெக்லஸை வைத்திருந்தனா்.
இந்த நிலையில், காா் டிக்கியில் வைத்திருந்த நெக்லஸ் மாயமானது. இதுகுறித்து ராஜசேகரன் அண்ணாமலை நகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பிரகாஷ் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து, இது தொடா்பாக விசாரணை நடத்தி வந்தனா்.
இதில், காரை ஓட்டிச் சென்ற தற்காலிக ஓட்டுநரான சிதம்பரம் மீனவா் காலனி, 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த கணேசன் (48) நெக்லஸை திருடியது தெரியவந்தது. காரில் செல்லும்போது அம்மாபேட்டை பாலம் அருகே கணேசன் மாத்திரை விழுங்குவதாகக் கூறி காரை நிறுத்தியுள்ளாா். அப்போது, காா் டிக்கியில் பையில் வைத்திருந்த நெக்லஸை அவா் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, அண்ணாமலை நகா் போலீஸாா் கணேசனை வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 4 பவுன் நெக்லஸை பறிமுதல் செய்தனா்.