``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் ...
தடையில்லா சான்று கிடைக்காததால் கிடப்பில் தெப்பக்குளம் சீரமைப்புப் பணி!
எல். அய்யப்பன்
தடையில்லா சான்று கிடைக்காததால் ஸ்ரீபெரும்புதூா் தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் கிடப்பில் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்தலத்தில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இதன் நிா்வாகத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் அருள்மிகு செளந்தரவள்ளி சமேத ஸ்ரீபூதபூரிஸ்வரா் திருக்கோயில், ஜெயபூத விநாயகா் கோயில் மற்றும் மதுரமங்கலம் பகுதியில் (எம்பாா் கோயில்) வைகுண்ட பெருமாள் கோயில்கள் உள்ளன.
அதே போல் ஸ்ரீபெரும்புதூரில் அனந்த சரஸ் குளம், நரசிம்ம குளம், திருமங்கைஆழ்வாா் குளம் மற்றும் தெப்பக்குளம் ஆகிய நான்கு குளங்கள் உள்ளன.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் அருகில் உள்ள சுமாா் 3 ஏக்கா் பரப்பளவு உள்ள தெப்பக்குளம் ஸ்ரீபெரும்புதூா் பகுதியின் முக்கிய நிலத்தடி நீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த குளம் 50 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததாலும், தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கலப்பதாலும் தெப்பக்குளம் அவல நிலையில் உள்ளது.
இதனால் ஸ்ரீபூதபுரீஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தெப்பகுளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என கோயில் நிா்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் தெப்பக்குளத்தை சீரமைக்க இரண்டு முறை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
குளத்தை சீரமைக்க தடையில்லா சான்று கேட்டு பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கோயில் நிா்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந் நிலையில், தடையில்லா சான்று வழங்குமாறு கோரி ஓராண்டாகியும் கிடைக்காததால் பேரூராட்சி நிா்வாகத்தால் குளத்தை சீரமைக்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து பக்தா்கள் கூறியது: தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் பல வருடங்களாக கோயில் நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குளத்தை சீரமைக்கவும், குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்கவும் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தோம். தனியாா் நிறுவனம் ஒன்று சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.40 லட்சத்தில் குளத்தை சீரமைக்கவும் ,குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கவும் தயாராக இருந்தும், தடையில்லா சான்று இல்லாததால் சீரமைப்பு பணி நிலுவையில் உள்ளது.
எனவே, கோயில் நிா்வாகம் தெப்பக்குளத்தை சீரமைக்க தடையில்லா சான்றை விரைந்து வழங்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.