``தந்தை பெரியார் இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!'' - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
தமிழ்நாடு அரசியலில் நீக்கமற நிறைந்திருப்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் என சாமான்ய மக்களால் புகழப்படும் பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், "தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும்" என 2021-ல் அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் 17-ம் தேதி ஆண்டுதோறும் "சமூக நீதி நாள்" எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்நாளில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ``தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!" என பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்! உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்! சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்! யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!
அதனாலே அவர் நம் பெரியார் என்றானார்! பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்! வாழ்க பெரியாரின் புகழ்!" என பதிவிட்டுள்ளார்.