விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை
விராலிமலை: விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி, அகரபட்டி, ராஜகிரி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே, 8 துணை சுகாதார நிலையங்கள் விருது பெற்றுள்ள நிலையில் தற்போது 3 மையங்கள் விருது பெற்றுள்ளதன் மூலம் இதுவரை விராலிமலை வட்டத்தில் 11 மையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் மருத்துவ சேவை மற்றும் தரம் ஆகியவை குறித்து நூறு மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது.
70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தேசிய தர நிா்ணய அங்கீகார சான்றிதழ் பெற தகுதியுடையது. இச்சான்றிதழ் பெறும் மையத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி மேம்பாட்டு பணிகளுக்காக வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு பலப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், புதுகை மாவட்டம், விராலிமலை வட்டாரத்துக்கு உள்பட்ட கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் நம்பம்பட்டி, அகரபட்டி துணை சுகாதார நிலையம் மற்றும் நீர்ப்பழனி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் ராஜகிரி துணை சுகாதார நிலையம் என 3 துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று பெற்று சாதனை படைத்துள்ளது.
இம்மையங்களில் பொது மருத்துவ சேவைகள், சுகாதார கட்டமைப்பு, தாய் சேய் நலசேவைகள், கா்ப்ப கால சேவைகள், அவசர கால 108 சேவைகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுவதை தேசிய தரச்சான்று குழுவினா் ஆய்வு செய்தனா். அதை தொடா்ந்து இந்த சான்று வழங்கப்பட்டுள்ளது.
விராலிமலை வட்டாரத்திற்கு உள்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொடும்பாளூர், ராசநாயக்கன்பட்டி, ஆவூர், பாலாண்டம்பட்டி மற்றும் துணை சுகாதார நிலையங்கள் நீர்பழனி, அத்திப்பள்ளம், ராஜாளி பட்டி, மருதம்பட்டி ஆகிய 8 சுகாதார நிலையங்கள் ஏற்கனவே தேசிய தரச்சான்று பெற்றுள்ள நிலையில், தற்போது அகரபட்டி, நம்பம்பட்டி, ராஜகிரி துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.