ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!
சேலம்: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்; இருவர் கைதின் பின்னணி என்ன?
சேலம் மாநகரில் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சேலம் உயிரியல் பூங்காவிலிருந்து ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தில் ஓட்டுநராக தனபால் என்பவரும், நடத்துநராக திருமுருகன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு 16 வயது நர்சிங் மாணவி அரசு நகரப் பேருந்தில் பயணித்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணடித்து சைகை காட்டியுள்ளார். இதை நர்சிங் மாணவி நடத்துநரிடம் தெரிவித்தும், அதற்கு நடத்துநர் எதுவும் கேட்காததால் நடத்துநரும் உடந்தையாக இருந்ததாக உறவினர்களுக்கு போன் மூலம் மாணவி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் ஆறு பேர் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் பேருந்தில் ஏறி நடத்துநரையும், ஓட்டுநரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

குறிப்பாக பேருந்துக்குள் ஏறி காலால் எட்டி உதைத்துத் தாக்கும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் தனபால், நடத்துநர் திருமுருகன் ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கேட்க வந்த போலீசாரை மாணவியின் தாயார் தள்ளிவிட்டுத் தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில், தன்னையும் தாக்கிவிட்டதாக மாணவியின் தாயார் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிப் பதிவுகளைக் கொண்டு சேலம் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாகத் தாக்குதல் நடத்திய ஆறுமுகம், பாலு என்ற இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.