தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் திருட்டு; தலைமை அர்ச்சகர் தலைமறைவு
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பலரால் கோயிலுக்கு வெள்ளி குடங்கள், வாளிகள், தாம்பூலங்கள், பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இவ்வாறு நன்கொடையாகப் பெறப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் அம்மன் சன்னதி மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் சில பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் பொன்னி தென்காசி காவல்துறையில் புகார் செய்தார்.

அந்த புகாரில் கும்பாபிஷேகத்திற்காக பக்தர்கள் காணிக்கையாக அளித்த பித்தளை குடம், சில்வர் வாளி, கரண்டி, பிரசாத பை உள்ளிட்ட பொருட்கள் அம்மன் சன்னதி மடப்பள்ளியில் இருந்தன. 21.08.2025 அன்று இரவு 7 மணிக்கு மடப்பள்ளியில் சோதனை செய்தபோது அந்தப் பொருள்கள் அங்கு இல்லை .
கோயிலில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்தபோது அங்கிருந்து பொருட்களை 10.08.2025 காலை 6 மணிக்கு கோயிலில் தற்காலிகமாக அர்ச்சகராகப் பணிபுரியும் அருப்புக்கோட்டை நடன சபாபதி, பக்தர்கள் ஹரி, தினேஷ் மற்றும் கணேசன் ஆகியோர் பெரிய அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்குகளில் இந்தப் பொருள்களை கோயிலின் தெற்குவாசல் வழியாக ஓர் ஆட்டோவில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து நடனசபாபதி மற்றும் ஹரி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோயிலில் முதன்மை அர்ச்சகராக உள்ள செந்தில் ஆறுமுகம் என்கிற செந்தில் பட்டர் வரச் சொன்னதால் அதை எடுத்து அர்ச்சகர் செந்தில் பட்டர் வீட்டிற்கு கொண்டு சென்றதாகத் தெரிவித்துள்ளனர்”.
கோயில் நிர்வாக அதிகாரி கொடுத்துள்ள புகாரின்படி கோயிலில் உள்ள 15 பித்தளை குடங்கள், 20 சில்வர் வாளிகள், 20 கரண்டிகள், இரண்டு பாக்ஸ் சால்வைகள், இரண்டு பாக்ஸ் பிரசாத பை ஆகியவை திருடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.1.95 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்காசி காவல்துறை ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய பக்தர்களான ஹரி, தினேஷ் மற்றும் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பட்டர் மற்றும் நடனசபாபதி ஆகியோர் தற்போது தலைமறைவாக உள்ளனர்.