Rajini: "திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா?" - ரஜினிகாந்த்த...
காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த தாய்; மகள் காதலுக்கு எதிர்ப்பு - ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர்
மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்த குமார்-ராஜலட்சுமி தம்பதியரின் மகன் வைரமுத்து, டிப்ளமோ படித்தவுடன் டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.
அதே பகுதியில் வசித்து வரும் குமார்-விஜயா தம்பதியரின் மகள், எம்.பி.ஏ பட்டதாரி, சென்னையில் வேலை செய்து வருகிறார். இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெண்ணின் அம்மா விஜயா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

அவ்வப்போது வைரமுத்து வேலை செய்கிற கடைக்கு சென்று, “என் மகளை விட்டு விது, இல்லை என்றால் நடக்கும் விஷயம் வேறாக இருக்கும்” என மிரட்டியுள்ளார். இதையடுத்து, மகளுக்காக அவசரமாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், நான் வைரமுத்துவை காதலிக்கிறேன்; அவரைத் தான் திருமணம் செய்யப் போகிறேன் என இளம் பெண் தன் காதலில் உறுதியாக இருப்பதை தன் அம்மாவிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இளம் பெண் வைரமுத்துவை சந்தித்து பேசுவதற்காக சென்னை செல்ல ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் குணால், சகோதரியான பெண்ணை தாக்கியுள்ளார். இதையடுத்து, வைரமுத்து காதலிக்கு போன் செய்ய முயற்சிக்கும்போது, குணால் வைரமுத்துவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். “இனி நீ என் அக்காவோடு பேசினால், உன் தலை இருக்காது” என்றும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, குணால் நடந்த சம்பவத்தை விஜயாவிடம் தெரிவித்துள்ளார். பின்னர், விஜயா, வேலை செய்த இடத்திற்கு சென்று வைரமுத்துவை தாக்கி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

மேலும், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் விஜயா புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது. இருதரப்பையும் போலீஸார் அழைத்து விசாரணை செய்தனர்.
இதில், “எங்க வீட்டுக்கு அனுப்பி வைத்தால் என்னை கொலை செய்து விடுவார்கள், நான் வைரமுத்துவுடன் செல்கிறேன்” என பெண் கூறியுள்ளார்.
உடனே, “இனி எங்களுக்கும் அவளுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என எழுதி, பெண்ணின் குடும்பத்தினர் அனுப்பி விட்டனர்.
இதையடுத்து, பதிவு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழ் சென்னையில் இருப்பதால், அதை எடுத்து வர பெண் சென்னை கிளம்பியுள்ளார்.
அவரை வைரமுத்து அனுப்பி விட்டு வரும் போது, குணால், குகன் உள்ளிட்ட சிலர் வைரமுத்துவை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை மயிலாடுதுறையை உலுக்கிய நிலையில், சி.பி.எம்., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் வைரமுத்துவின் உறவினர்கள், காதலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கதறி அழுதனர்.
“இது அப்பட்டமான ஆணவக் கொலை; இதற்குக் காரணமான பெண்ணின் தாயின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; வைரமுத்து குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்; அதுவரை வைரமுத்துவின் உடலை வாங்க மாட்டோம்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து சிலரிடம் பேசினோம். காதலித்த பெண்ணின் அம்மா விஜயா மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், தனது சமூகத்தின் எதிர்ப்பின்பேரில், குமாரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் அவரது பெற்றோர் விஜயாவை கடைசி வரை ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகின்றது.
“என்னைப் போல, என் மகளுக்கும் அந்த நிலை வரக் கூடாது” என்பதற்காக, மகளின் காதலை அவர் தள்ளியுள்ளார். ஆனால் மகள் தன் காதலில் உறுதியாக இருந்துள்ளார்.
இதை பிடிக்காத விஜயா, மகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தார் மற்றும் இதை தன் மகன்களின் மனதிலும் விதைத்து விட்டார்.
இது தற்போது ஆணவக் கொலையில் முடிந்து விட்டது. உயிருக்கு உயிராய் காதலித்து வாழ ஆசைப்பட்ட இரு இளம் உயிர்களின் வாழ்க்கை இப்போது பறிபோய் விட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொலை தொடர்பாக, பெண்ணின் சகோதரர்கள் உள்பட ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.