``2026 தேர்தலுக்கு பிறகு பழனிசாமி நடுரோட்டில் நிற்கப்போகிறார்'' - டிடிவி தினகரன் காட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இன்று (செப்.17) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடியை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
"உள்துறை அமைச்சரைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
இதுவரை அரசியலில் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எந்த ஒரு கட்சித் தலைவராவது கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துவிட்டு வரும்போது இப்படி முகத்தை மூடிக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறீர்களா?
அருகில் அமர்ந்திருந்தது அவரது அன்பு மகன் என்று ஊடகங்களைப் பார்க்கும்போதுதான் தெரிந்தது. முகத்தை மூடிக்கொண்டு வந்ததற்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். இனி அவரை முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும்.

நல்ல வேலை முகமூடிக்கொள்ளையன் மாதிரி வரவில்லை. பழனிசாமி அடிக்கின்ற கூத்தையெல்லாம் ராஜதந்திரம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவருடைய குணாதிசயம் இதுதான். தமிழ்நாட்டு மக்கள் இவரிடம் இனி ஏமாற மாட்டார்கள். தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அதுதான் அடிப்படை விதி. அதைத்தான் அம்மா (ஜெயலலிதா) அவர்களும் பின்பற்றினார்கள்.
அந்த அடிப்படை விதியையே மாற்றியதனால் இனி அந்தக் கட்சி பெயர் அதிமுக இல்லை எடப்பாடி திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இப்போது இல்லை.
புரட்சி தலைவரும், புரட்சி தலைவியும் போற்றிக்காத்த இரட்டை இல்லை சின்னத்தை வைத்துக்கொண்டு தொண்டர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றப்பார்க்கிறார்.
இந்தத் தேர்தலில் எவ்வளவு தான் பணப் பலம் இருந்தாலும், எப்படி கூட்டணி வைத்தாலும் பழனிசாமி தோல்வியைச் சந்திக்கப்போவது உறுதி.
எல்லோருக்கும் துரோகம் செய்தப் பழனிசாமி 2026 தேர்தலுக்கு பிறகு நடுரோட்டில் நிற்கப்போகிறார். அதை எல்லோரும் பார்க்கப் போகிறார்கள்" என்று டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.