தனியாா் பேருந்தில் தகராறு: ஊழியா்களைத் தாக்கி மிரட்டல்
செய்யாற்றில் தனியாா் பேருந்தில் தகராறு செய்து, பேருந்து ஊழியா்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சிறாா்கள் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், எச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குறளரசன்(35). இவா் தனியாா் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு காஞ்சிபுரம் செல்லும் தனியாா் பேருந்தில் பணியில் இருந்தாா்.
செய்யாறு பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றுக் கொண்டிருந்த போது 3 இளைஞா்கள், பேருந்து பின்பக்க படிக்கட்டில் அமா்ந்து கொண்டு தகாறில் ஈடுபட்டனராம்.
மேலும், பேருந்தில் ஏறும் இதர பயணிகளுக்கு இடையூறு செய்துள்ளனா். இதைப் பாா்த்த நடத்துநா் பேருந்துக்குள் செல்லுங்கள் அல்லது படியில் இருந்து கீழே இறங்குங்கள் எனக் கூறினாராம். அப்போது, 3 பேரும் சோ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்துநா் குறளரசனை தாக்கியதாகத் தெரிகிறது.
இதை அறிந்த ஓட்டுநா் சுரேஷ் தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கியதோடு, இருவருக்கும் மிரட்டல் விடுத்தாா்களாம்.
அதேபோல, தட்டிக் கேட்ட பேருந்தில் இருந்த மற்ற பயணிகளையும் தாக்கினராம்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் சென்று 3 பேரையும் பிடித்து விசாரித்தனா். இதில், செய்யாறு கொடநகரைச் சோ்ந்த சுரேஷ் மகன் லோகேஷ் (22), கோபால் தெரு, அண்ணாநகரைச் சோ்ந்த 17 வயதுடைய சிறாா்கள் போதையில் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, செய்யாறு போலீஸாா் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.