தலைவன் தலைவி விமர்சனம்: காதலும் மோதலுமான கணவன் - மனைவி! எப்படி இருக்கு இந்த கமெர்சியல் பரோட்டா?
மதுரை ஒத்தக்கடையில் ஹோட்டல் நடத்திவரும் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி). அவர் மனைவி பேரரசி (நித்யா மெனேன்). இவர்கள் இருவருக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளால் இருவீட்டாரும் தலையிட, பிரிவின் எல்லைக்குப் போய் நிற்கிறது கணவன் - மனைவி உறவு.
அதன் பிறகு ஆகாச வீரனுக்கு அறிவிக்காமல் அவர் மகளுக்கு மொட்டையடிக்க கோயிலில் கூடுகிறது பேரரசியின் குடும்பம். விஷயம் அறிந்து களமிறங்குகிறது ஆகாச வீரன் குடும்பம். அவர்கள் ஏன் பிரிந்தார்கள், என்ன சண்டை, இருவீட்டாரின் பஞ்சாயத்து எங்கே போய் முடிகிறது என்பதை பரோட்டா, கொத்துக்கறி, ஆம்லேட் என மிலிட்டரி ஹோட்டல் மெனுவாக, கமர்சியல் தூக்கலாகப் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

ஆகாச வீரனாக விஜய் சேதுபதி. தன் மனைவியிடம், `நான் பேசல மேடம், நான் பேசல மேடம்' எனக் கத்துவதாகட்டும், கோபித்துக்கொண்டு செல்லும்போது கெஞ்சுவதாகட்டும், சண்டைக் காட்சிகளில் திமிறிக்கொண்டு நிற்பதாகட்டும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
`நானா பாத்து கல்யாணம் பண்ணினேன். நீங்கதான கூட்டிட்டு வந்திங்க' எனப் பெற்றோரிடம் மல்லுக்கட்டிவிட்டுக் கிளம்பிச் செல்வது தொடங்கி, கட்டை பையை எடுத்துக்கொண்டு அடிக்கடி கிளம்பிவருவது வரை ஆகாச வீரனின் பேரரசியாக இதுவரை தான் நடித்திடாத கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் நித்யா மெனேன்.
இவர்கள் தவிர யோகி பாபு, சரவணன், செம்பன் வினோத், காளி வெங்கட், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினி, தீபா, ரோஷினி ஹரிப்ரியன், சென்றாயன் எனப் படம் முழுக்க அத்தனை கதாபாத்திரங்கள். அனைவரும் தங்களுக்குக் கொடுத்த பாத்திரத்தைச் செய்திருக்கிறார்கள்.

அவர்களில் க்ளாப்ஸ் வாங்குவது யோகி பாபு மட்டுமே! படம் தொடங்கியதிலிருந்து தனது ஒன்லைனர்களாலும், ரியாக்சன்களாலும் தலைவன் - தலைவிக்குத் துணையாக நிற்கிறார். செம்பன் வினோத் பொறுப்பான மாமனாராக மனம் கவர்கிறார்.
கருப்பசாமி கோயில், ஹோட்டல், மலை எனக் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பயணிக்கும் கதையில், அனைத்து ஏரியாவிலும் தனது ஒளிப்பதிவைச் செவ்வனே செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார்.
கல்யாணம், சண்டை, குழந்தை என ஒவ்வொரு தளங்களில் நடக்கும் பிளாஷ்பேக் கதை சொல்லலுக்குத் தன்னால் இயன்ற ஒத்துழைப்பைக் கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ்.

பாடல் காட்சிகளிலும், விஜய் சேதுபதி - நித்யா மெனேன் இருவரது சண்டைக்காட்சிகளிலும் அந்த அனிமேஷன் ஐடியா ஒர்க் ஆகியிருக்கிறது. வெவ்வேறு எமோஷன்களுக்குத் திடீர் திடீரென, தினுசு தினுசான புரோட்டாவாக மாறும் கதையோட்டத்திற்குப் பக்க பலமாக இருந்து பல இடங்களில் காப்பாற்றியும் விடுகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
`ஆகாச வீரன்', `பொட்டல மிட்டாய்' பாடல்களில் ச.நாவின் முத்திரை தெரிகிறது.
லவ் - ஹேட் ரிலேசன்ஷிப்பை குடும்ப உறுப்பினர்களின் தலையீடு எப்படிப் பிரளயமாக மாற்றுகிறது என்பதை காமெடி ட்ரீட்மென்ட்டில் கலகலப்பாகத் தந்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
ஆனால், சதா சண்டையால் பிரிந்து செல்லும் மனைவி, அவரிடம் கெஞ்சும் கணவன் என மீண்டும் மீண்டும் ரிப்பீட் அடிப்பது ஒரு கட்டத்தில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அம்மாவாக வரும் தீபா திடீரென சேர்ந்து வாழச் சொல்வதும், பின் பிரியச் சொல்வதுமாக மாறி மாறிப் பேசுவதும் பல இடங்களில் குழப்பத்தைத் தருகிறது.
இரு மாமியார்களுமே சண்டையை மூட்டிவிடும் கதாபாத்திரமாக மட்டுமே வந்துபோவது நெருடல். ஜாலி மோடில் தொடங்கும் திரைக்கதையில் சில கதாபாத்திரங்கள் மட்டுமே அவ்வப்போது சீரியஸ் ஆவதும், திடீரென எமோசனல் காட்சிகள் வருவதும் சில இடங்களில் கதையோட்டத்திலிருந்து விலக வைக்கின்றன.

உறவுகள் குறித்த அக்கறை என்பது தேவைதான். ஆனால் விவாகரத்து என்கிற சட்ட ரீதியான தீர்வை அவ்வளவு அசட்டையாகக் கையாண்டிருப்பது தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று.
கதையின் எமோசனல் டிராக்கை இன்னும் காெஞ்சம் சீர்படுத்தியிருந்தால் தலைவன் - தலைவி மறக்க முடியாத காரசாரமான விருந்தாகியிருக்கும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...