மாரீசன் விமர்சனம்: ஃபார்மல் டிரஸ் வடிவேலு, பக்கா திருடர் பகத் பாசில்; இந்தப் பயணம் எப்படி?
சிறுசிறு திருட்டுகள் செய்யும் திருடரான தயாளன் (பகத் பாசில்), பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து விடுதலையாகிறார். மீண்டும் திருடுவதற்காக நாகர்கோவிலுள்ள பூட்டிய வீடு ஒன்றில் நுழைய, அங்கே ஓர் அறையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் வேலாயுதத்தை (வடிவேலு) பார்க்கிறார்.
தான் ஒரு நினைவுத் திறன் இழப்பு நோயாளி (Alzheimer) என்பதால், தன்னை தன் மகன் கட்டி வைத்திருக்கிறார் என்றும், தன்னை அங்கிருந்து கூட்டிச் சென்றால் பணம் தருகிறேன் என்றும் தயாளனிடம் வாக்களிக்கிறார்.
வேலாயுதத்தை மீட்டு, அவரிடம் பணம் வாங்கும் தருணத்தில், அவரின் வங்கிக் கணக்கில் ரூபாய் 25 லட்சம் இருப்பதை அறிந்து, அதையும் திருட முடிவெடுக்கிறார் தயாளன். அதனால், திருவண்ணாமலை போக முடிவெடுக்கும் வேலாயுதத்தை, தன் பைக்கிலேயே ஏற்றிக் கொண்டு, திருவண்ணாமலைக்குப் பயணிக்கிறார் தயாளன்.
இந்தப் பயணத்தில், அப்பணத்தைத் திருடினாரா, வேலாயுதத்தின் பின்னணி என்ன போன்றவற்றோடு, வேலாயுதத்தால் தயாளனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தையும் பேசுகிறது சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கும் 'மாரீசன்' திரைப்படம்.
ஃபார்மல் டிரஸ், அப்பாவித்தனம், நோய்மையால் அவதியுறும் தருணங்கள், சமூகத்தின் மீதான கோபம், ஆக்ரோஷம் எனச் சிறிது சிறிதாக ஆழமாகும் வேலாயுதம் கதாபாத்திரத்தைத் தன் அனுபவ நடிப்பால் கூர்மையாக்குகிறார் வடிவேலு.
நினைவுத் திறன் இழப்புகளால் சில கணம் பரிதாபத்தை வரவழைப்பது மட்டுமல்லாமல், சில கணம் சிரிப்பையும் வரவழைக்கிறார். அதேநேரம் அக்கதாபாத்திரத்தின் கண்ணியத்தையும் சரியவிடாமல் காப்பாற்றியிருக்கிறார் வடிவேலு.
அழுகை, பரிதாபம் போன்ற உணர்வுகளில், தன் வழக்கமான உடல்மொழியிலிருந்து விலகி, வேறொரு உடல்மொழியைக் கொண்டு வந்திருப்பது சிறப்பு!
துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் கொண்ட சேட்டைக்காரத் திருடராக பகத் பாசில் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். அதே நேரம், எமோஷன் ரோட்டிலும் பிசிறு தட்டாத பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
உடல்மொழி, சிறு சிறு மாற்றங்களைக் கூட வெளிப்படுத்தும் முகபாவங்கள் எனத் தன் ஏரியாவில் மிரட்டியிருக்கிறார் பஹத்.
சித்தாரா, உணர்வுபூர்வமான காட்சிகளுக்குக் கைகொடுக்க, விவேக் பிரசன்னா, கோவை சரளா ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
பைக் பயணம், நெடுஞ்சாலைகள், கிராமங்கள் நிறைந்த முதற்பாதி பயணத்தை, தன் ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான ஒளிப்பதிவால் அலுப்பில்லாத பயணமாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி.
ஶ்ரீஜித் சாராங்கின் படத்தொகுப்பில் ஆங்காங்கே சில காட்சிகள் கோர்வையில்லாமல் தாவும் உணர்வை உண்டாக்குகின்றன. அதனால், சில இடங்கள் குழப்பத்தைத் தருகின்றன.
யுவன் சங்கர் ராஜாவின் ரீமிக்ஸில், இளையராஜாவின் 'நேத்து ஒருத்தர ஒருத்தரப் பார்த்தோம்' பாடல் 'வைப்' ஏற்றுகிறது. 'மாரீசா' பாடல் ஆறுதல் தர, ஏனைய பாடல்கள் இப்பயணத்திற்குச் சுவை கூட்டவில்லை. பின்னணி இசையால், எமோஷன் மீட்டரையும், பரபர மீட்டரையும் ஆங்காங்கே ஏற்றியிருக்கிறார்.
இரண்டு வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ள கதாபாத்திரங்கள் சந்தித்துக்கொள்வது, அவர்களுக்கிடையிலான முரண்கள் வெளிப்படுவது எனத் தொடக்கத்திலிருந்து சுவாரஸ்யமாகவே தொடங்குகிறது படம்.
வடிவேலுவின் நினைவுத் திறன் இழப்பால் பகத் பாசில் படும்பாட்டையும், பணத்தைத் திருட அவர் எடுக்கும் முயற்சிகளையும், சின்ன சின்ன ட்விஸ்டுகளோடு சிரிக்க வைத்தது சிறப்பு!
சிரிப்பலைகளுக்கிடையில், வேலாயுதம் கதாபாத்திரத்தின் பின்னணியையும், அதோடு சேர்ந்து சில மர்மங்களையும் கூட்டுவது திரைக்கதையைச் செறிவாக்கியிருக்கிறது. அதிலும் அந்த இடைவேளை சுவாரஸ்யம்!
இரண்டாம் பாதியில் இரண்டு கதாபாத்திரங்களும் வெவ்வேறு பரிமாணங்கள் எடுக்கின்றன. அதற்கு ஏற்றார் போல், திரைக்கதையும் கியரைக் கூட்டி த்ரில்லர் பாதைக்கு மாறுகிறது. அதேநேரம், இரண்டாம் பாதிக்கு அச்சாரமாக இருக்கும் பின்கதை, புதுமையில்லாமல் யூகிக்கும் படி வருவது பெரிய மைனஸ்!
அதன் மேம்போக்கான திரையாக்கமும் பின்கதையில் அழுத்தத்தைக் குறைக்க முயல, வடிவேலு - சித்தாரா ஆகியோரின் அடர்த்தியான நடிப்பு ஓரளவிற்கு அக்குறையை மறைக்கிறது.
இவற்றுக்கிடையில், வடிவேலு, பகத் பாசில் ஆகியோருக்கு இடையிலான உறவு, முதற்பாதி தந்த நெருக்கத்தோடு இறுதிவரை அழுத்தம் திருத்தமாக நகர்வது ஆறுதல்!
அதீத ஹீரோயிஸத்தால் லாஜிக் இல்லாமல் நடக்கும் பழிவாங்கும் படலம், தேவையில்லாத ஆக்ஷன் காட்சிகள், எமோஷனை வலிந்து திணிக்கும் வசனங்கள் போன்றவற்றால் அதுவரை இருந்த சுவாரஸ்யம் சிறிது தடம் புரள்கிறது.
வழக்கமான ஹீரோயிஸ இறுதிக்காட்சியைச் சின்ன சின்ன ட்விஸ்ட்களும், நெகிழ்வான வசனங்களும் மட்டுமே காப்பாற்றுகின்றன.
இரண்டாம் பாதி சின்ன சின்ன இடறல்களைக் கொடுத்தாலும், மாயப் பொன் மானாக வந்து நம் மனதைக் கவர்கிறார் இந்த 'மாரீசன்'.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...