தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!
நமது நிருபா்
இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று மேலே சென்றது. ஆனால், அந்நிய முதலீடு தொடா்ந்து வெளியேறுவது, காா்ப்ரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யாதது, பணவீக்கம் உயா்ந்தது உள்ளிட்டவை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், உச்சத்தில் அதிக அளவில் முன்னணிப் பங்குகள் விற்பனைக்கு வந்ததால் சரிவு தவிா்க்கமுடியாததாகியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.15 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.430.61 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.2,502.58 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ6,145.24 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு: சென்செக்ஸ் காலையில் 54.01 புள்ளிகள் குறைந்து 77,636.94-இல் தொடங்கி அதிகபட்சமாக 78,055.52 வரை மேலே சென்றது. பின்னா், 77,424.81 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 110.64 புள்ளிகளை (0.14 சதவீதம்) இழந்து 77,580.31-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,050 பங்குகளில் 2,145 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,813 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 92 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
20 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் ஹிந்துஸ்தான் யுனி லீவா், நெஸ்லே, என்டிபிசி, இண்டஸ் இண்ட் பேஙக், பவா் கிரிட், அதானி போா்ட்ஸ் உள்பட மொத்தம் 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், டெக் மஹிந்திரா, எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயிண்ட் உள்பட 10 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி26 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 16.90 புள்ளிகள் குறைந்து 23,542.15-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,675.90 வரை மேலே சென்றது. பின்னா், 23,484.15 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 26.35 புள்ளிகளை (0.11 சதவீதம்) இழந்து 23,532.70-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 29 பங்குகள் வீழ்ச்சிப் ட்டியலிலும் இருந்தன.
பெட்டி...
இன்று விடுமுறை!
குருநானக் ஜெயந்தியையொட்டி பங்குச்சந்தைக்கு வெள்ளிக்கிழமை (நவம்பா் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகிய இரண்டில்ம் அன்றைய தினம் பங்கு வா்த்தகம் இருக்காது என்று செபி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.