அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்
தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக! முதல்வர் ஸ்டாலின்
தவறு செய்தவர்கள் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின்தான் பாஜக என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 738 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
”ராமநாதபுரம் என்றால் தண்ணீர் இல்லாத காடென்று கூறுவார்கள். அந்த நிலைமையை மாற்றிக் காட்டியது திமுக அரசு. ராமநாதபுரம் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரூ. 616 கோடி மதிப்பில் காவிரி கூட்டுநீர் திட்டம் 2 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. தற்போது கூட்டுநீர் திட்டம் விரிவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மீனவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்னை இலங்கை கடற்படை தாக்குதல். நாம் தொடர்ந்து போராடுகிறோம். ஆனால், மத்திய அரசு மீனவர்கள் பிரச்னைக்கு எதுவும் செய்யவில்லை. கச்சதீவை மீட்பது ஒரே தீர்வு என வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க மறுக்கிறது.
தமிழகத்தின் மீது அவர்கள் காட்டக்கூடிய வன்மத்தை நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்துக்கு வஞ்சகம் செய்வதை பாஜக தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.
தமிழகத்தை மூன்று முறை பேரிடர் தாக்கி, ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டபோது வராத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு வருகிறார். மணிப்பூர் கலவரம், கும்பமேளா மரணம், குஜராத் விபத்துக்கெல்லாம் குழு அமைக்காத பாஜக, கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறது. தமிழ்நாட்டின் மீதுள்ள அக்கறையால் கிடையாது. அடுத்தாண்டு தேர்தல் வருவதால், இதன்மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, யாரையாவது மிரட்டலாமா எனப் பார்க்கிறது.
யாருடையாவது ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் ஒட்டுனியாகதான் பாஜக இருக்கிறது. மாநில நலன்கள், உரிமைகளை பறித்து செயல்படும் பாஜகவுடன் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி வைத்துள்ளது. பாஜகவை அதிமுக ஆதரிக்க கொள்கை இருக்கிறதா? குறைந்தபட்ச செயல்திட்டம் இருக்கிறதா? என்றால் இல்லை. தவறு செய்தவர்கள் அனைவரும் அடைக்கலமாகி தங்களின் தவறுகளில் இருந்து தப்பிக்கும் வாசிங் மெசின்தான் பாஜக. அதில், உத்தமராகிவிடலாம் எனக் குதித்திருக்கும் இபிஎஸ்ஸுக்கு, கூட்டணிக்கு ஆள்சேர்க்கும் அசைன்மெண்ட் கொடுத்துள்ளனர்.
நாட்டு மக்களை துண்டாடும் ஆர்எஸ்எஸ் கொள்கையை முழுவீச்சில் செயல்படுத்தியிருக்கும் அதிகார முகம்தான் பாஜக. மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் யாரும் அவருடன் கூட்டணி வைக்கமாட்டார்கள். காமராஜரை கொல்ல முயற்சித்தது ஆர்எஸ்எஸ் இயக்கம்.” எனத் தெரிவித்தார்.