ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்ட...
‘நிர்வாணப் படத்தை அனுப்பு’: அக்ஷய் குமார் மகளிடம் ஆன்லைன் விளையாட்டில் அத்துமீறல்!
நடிகர் அக்ஷய் குமாரின் மகளிடம் ஆடைகளைக் களைந்துவிட்டு இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றச் சொல்லி இணையவழியில் சில மர்ம நபர்கள் எல்லை மீறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போனில் இணையவழி விளையாட்டில் ஈடுபட்டிருந்த அக்ஷய் குமாரின் பதின்பருவ மகளிடம் ‘உன்னுடைய நிர்வாணப் படத்தை பதிவேற்று’ என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டதைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
சைபர் செக்யூரிட்டி(இணையவழி பாதுகாப்பு) குறித்து மும்பையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அக்ஷய் குமார் இந்தத் தகவலை மக்களுடன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து நடிகர் அக்ஷய் குமார் கூறியிருப்பதாவது: “எனது மகள் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்மார்ட்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அவருடன் இணைந்து உலகின் ஏதோவொரு மூலையில் இருந்தபடி ஆன்லைன் கேமில் பங்கேற்ற ஒருவர், எனது மகளிடம் ‘நீ எங்கிருந்து விளையாடுகிறாய்?’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவளோ, ‘நான் மும்பையில் இருக்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து இருவரும் விளையாட்டை தொடர்ந்துள்ளனர். அப்போது அந்த நபர் எனது மகளிடம் ‘நீ ஒரு ஆணா? அல்லது பெண்ணா?’ என்று கேட்டுள்ளார். இவள் ‘நான் ஒரு பெண்’ என்று பதிலளித்துள்ளார். அதன்பின் அவர் ஆபாச பதிவுகளை அனுப்பியுள்ளார்.
அதன்பின் சிறிது இடைவெளிக்குப்பின் அந்த நபர், ‘உனது நிர்வாணப் படத்தைக் காட்டு’ என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதைக் கண்டதும் அதிர்ந்துபோன் எனது மகள் உடனடியாக போனை அணைத்து வைத்துவிட்டு தனது அம்மாவிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்” என்று அக்ஷய் குமார் பேசினார்.
சைபர் குற்றவாளிகளின் வலையில் குழந்தைகள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். சைபர் குற்றச்செயல்கள் சாதாரண குற்றங்களைவிடப் பெரியவை, அவற்றை நாம் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அக்ஷய் குமார், சைபர் பதுகாப்பு குறித்து பள்ளிகளில் 7 வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் வாராந்திர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் விழா மேடையில் அமர்ந்திருந்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.