ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்ட...
பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!
பிரபல பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணத்தில், கைது செய்யப்பட்ட அவரது சிங்கப்பூர் விழா ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹாந்தா இந்த விவகாரத்தில் தான் பலிகடா ஆக்கப்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்க், கடந்த செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்கச் சென்றிருந்தார். அப்போது, கடந்த செப்.19 ஆம் தேதி ஆழ்கடல் சாகத்தில் ஈடுபட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகிய நிலையில், பாடகர் ஸுபீன் கர்க்கின் மேலாளர் மற்றும் சிங்கப்பூர் விழாவின் ஏற்பாட்டாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஊடகங்களில் வெளியான பொய்யான தகவல்களின் அழுத்தத்தினால் இந்த விவகாரத்தில் அவர் பலிகடா ஆக்கப்படுவதாகக் குறிப்பிட்டு, விழா ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹாந்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாடகர் ஸுபீன் கர்க் விபத்தில் சிக்கியபோது, ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹாந்தா சம்பவம் நடைபெற்ற இடத்தில் இல்லை எனவும்; விழா நடைபெறும் இடத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த அவருக்கும் செல்போன் அழைப்பின் மூலம் மட்டுமே சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணத்தில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என சிங்கப்பூர் அதிகாரிகளின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது மரணத்துக்கு விழா ஏற்பாட்டாளர் மஹாந்தாவே காரணம் என அசாம் ஊடகங்களில் செய்திகள் வெளியானதால், அவருக்கு பலரும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறும், சிங்கப்பூர் அதிகாரிகளிடம் இருந்து ஆதாரங்களை விரைவில் பெற்று பாதுகாக்குமாறும் அவர் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: புகழ்பெற்ற பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் காலமானார்!