'Drone-கள் விமானப்படையின் எதிர்காலமா?' - எலான் மஸ்கின் கருத்திற்கு இந்திய விமானப...
மயிலாடுதுறை: "பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல" - பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952ல் தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டு அப்பகுதி மக்களின் தொடக்கக் கால கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டு வந்தது.
மீண்டும் இப்பள்ளி 2008ல் மறுசீரமைக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக இன்றும் அப்பகுதி மாணவர்களுக்கான தொடக்கக்கால கல்வியை வழங்கி வருகிறது. தற்போது பூங்குடி மற்றும் தோப்புத்தெரு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் 20 பேரும், மாணவிகள் 14 பேருமான 34 மாணாக்கர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் தனித்தனியே கழிவறைகள் இல்லாதது அப்பள்ளி மாணவர்களுக்கு அசெளகரியான சூழலை உருவாக்குகிறது.

இதுகுறித்து மாணாக்கர்களின் பெற்றோர்களின் பேசும் போது,
"அந்த ஸ்கூல்ல ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் ஒரே பாத்ரூம்தான் இருக்கு. இதனால், ரெண்டு ஆம்ளபுள்ள பாத்ரூம்ல இருந்தா ரெண்டு பொம்பள புள்ள போகணும்னா உடனே போக முடியல. பாவம் அறியாத வயசு வேற அந்தக் குழந்தைக்களுக்கெல்லாம் என்ன பண்ணும்னு கூட தெரில ரொம்ப சிரமப்படுறாங்க. வீட்ல எங்கள்ட வந்து சொல்லுதுங்க பாத்ரூம் போணுன்னா உடனே போகமுடியல்லமான்னு.
நாங்களும் பாத்ரூம் கட்டித்தரச்சொல்லி எத்தனையோ மனு கிராம சபா கூட்டத்துல குடுத்து இருக்கோம். ஆனா கட்டிக்குடுத்த பாடு இல்ல. சீக்கிரம் கட்டிக்குடுத்துட்டா நல்லாயிருக்கும். பாவம் சின்ன பசங்க ரொம்ப செரம படுறாங்க" எனத் தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ரஞ்சித் குமாரிடம் கேட்டறிந்த போது,
"பள்ளியில் இதற்கு முன்பு இருந்த கழிவறையானது சேதமடைந்த நிலையில், புதிதாகக் கட்டித் தரப்படும் எனக் கூறி இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளியின் கழிவறை இடிக்கப்பட்டது. எங்கள் கல்வித்துறை சார்பிலும், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் கிராம சபா கூட்டங்களிலும் ஒருவருட காலமாகத் தொடர்ந்து மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்டித்தரோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்று கூறினார்.

இது பற்றி கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சன் கூறுகையில், "மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா அவர்களிடம் கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கிக் கட்டி தருவதாகக் கூறியுள்ளார்" என்றார்.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, "கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலரை என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள்" என்றார்.
கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சன், "நான் தொடர்புகொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் சுதா அவர்கள் அழைப்பினை ஏற்கவில்லை. கூட்டம் ஒன்றில் சந்தித்தோம். அப்போதும் பேசமுடியவில்லை. அவரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு பேசுகிறேன்" என்றார் .
அரசு விரைந்து துறைசார் நடவடிக்கை மேற்கொண்டு மாணவர்களின் அசெளரிகத்தை உடனே சரி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.