பாகிஸ்தான் கார் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி, 32 பேர் படுகாயம்; பின்னணி என்ன?
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் (Frontier Corps - FC) தலைமையகம் அருகே இன்று (செப் 30) கோர கார் வெடிகுண்டு விபத்து நடந்திருக்கிறது.
காரில் வெடிகுண்டுகளை நிரப்பி வைத்து வெடிக்க வைத்திருக்கும் இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் காணொலி வெளியாகியிருக்கிறது. இதைத்தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியாகியிருப்பதாகவும், 32 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிர்வில் அருகிலிருந்த கட்டிடங்களும் வாகனங்களும் பலத்த சேதமடைந்திருக்கின்றன.

பலுசிஸ்தான் முதலமைச்சர் மிர் சர்ஃப்ராஸ் புக்டி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து, 'இது ஒரு கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால், பலுசிஸ்தான் மாகாணத்தில் நீண்டகாலமாகப் பிரிவினைவாதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலூச் அமைப்புகளின் மீது சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
களேபரத்தில் பலுசிஸ்தான்
"பலுசிஸ்தான் மாகாணத்தில் மனித, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் வேண்டும். இல்லையெனில் சுதந்திரம் வேண்டும். நாங்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இல்லை. பாகிஸ்தான் அரசுதான் எங்களுக்கு எதிராக இருக்கிறது" என்று கிளர்ச்சிப்படைகள் நீண்ட காலமாகப் போராடிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் எனக் கிளர்ச்சி செய்யும் பலரைக் கைதுசெய்து சுட்டுக் கொல்லும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறிவருகிறது. கிளர்ச்சிப்படைகள் இரயில் ரயில் கடத்தல், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவதும் என பலுசிஸ்தான் மாகாணம் களேபரமாகிக் கொண்டிருக்கிறது. அப்பகுதி மக்கள் எப்போதும் பதைபதைப்புடன் இருக்கும் நிச்சயமற்ற சூழலில் தவித்து வருகின்றனர்.
#BREAKING: 8 killed in a Suicide Bombing at the Frontier Corps HQs in Quetta of Balochistan, 15 others injured. Baloch rebels could be likely behind the attack against Pakistan Army and security forces. pic.twitter.com/h4mOAmmRhT
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 30, 2025
இந்நிலையில் கிளர்ச்சிப் படைகள், அரசியல் அதிகாரம் எனப் பிரிவினைவாதம் பேசும் படைகள்தான் இந்தச் சம்பவத்தைச் செய்திருக்கலாம் என்று பாகிஸ்தான் சந்தேகிக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இந்தச் சம்பவத்திற்கு யார் காரணம் என்று கூறப்படவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.