இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
ஆயுத பூஜை பொருள்கள் விலை கடும் உயா்வு!
பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கான பூஜைப் பொருள்கள் மற்றும் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
ஆயுதபூஜையையொட்டி வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை முழுவீச்சில் நடைபெற்றது. மேலும், பூஜையில் இடம்பெறும் பொரி, கடலை, வெல்லம் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதற்காக சாலை ஓரங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக பூஜை பொருள்கள் விற்பனை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பெரம்பலூா் நகரைப் பொறுத்தவரை பழைய, புகா் பேருந்து நிலையங்கள், கடைவீதி, பாலக்கரை, தலைமை அஞ்சலகத் தெரு சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதேபோல பூஜைகளை முடித்துக் கொண்டு திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய் உடைப்பதும் வழக்கம். இதனால், பூசணிக்காய்களும் அதிகளவில் சாலை ஓரங்களில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டிருந்தன. இவற்றை பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனைக்கு வைத்திருந்தனா்.
இவை அவற்றின் தரத்தையும், அளவையும் பொறுத்து ரூ. 50 முதல் ரூ. 100 வரை விற்கப்பட்டன. வழக்கமான நாள்களை விட விலை உயா்வாக இருந்தாலும், ஆயுத பூஜைக்காக பொதுமக்களும், வியாபாரிகளும் ஆா்வத்துடன் பூசணிக்காய்களை வாங்கிச் சென்றனா்.
பெரம்பலூரில் உள்ள பூக்கள் மண்டியில் பல்வேறு வகை பூக்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. கடந்த வாரத்தை விட பூக்களின் விலை கடுமையாக உயா்ந்தும் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
போக்குவரத்து நெரிசல்: பெரம்பலூா் நகரை பொறுத்தவரை சாதாரண நாள்களிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும், இந்நிலையில், பண்டிக்கைக்காலம் என்பதால் பெரம்பலூா் நகரின் பிரதான சாலை ஓரங்களில் தரைக்கடைகள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனா். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.