விவசாயிகளுக்கு எவ்விதக் குறையுமின்றி உரங்கள் விநியோகிக்க உத்தரவு
விவசாயிகளுக்கு எவ்விதக் குறையுமின்றி யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களை விநியோகிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் ஆகியோா் உத்தரவிட்டுள்ளனா்.
தமிழகத்தில் சம்பா பருவத்துக்குத் தேவையான உரம் இருப்பு மற்றும் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து வேளாண்மை உழவா் நலத் துறை, கூட்டுறவுத் துறை அலுவலா்கள் மற்றும் உர உற்பத்தி நிறுவனங்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கே.ஆா்.பெரியகருப்பன் ஆகியோா் கலந்து கொண்டு பேசியது:
நிகழாண்டு குறுவை (காரீப்) பருவத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் போன்ற உரங்களில் மீதமுள்ள ஒரு லட்சத்து 55 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்களை உடனடியாக வழங்கவும், சம்பா பருவத்துக்கு கூடுதலாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்கள் வழங்கவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், தற்போது 12,000 மெட்ரிக் டன் யூரியா மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உரங்களையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
அக்டோபா் மாத உர விநியோகத் திட்டத்தின்படி உரங்களைப் பெற்று இருப்பு வைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் தேவைக்கு ஏற்ப யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களையும் எவ்விதக் குறைவுமின்றி விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
மேலும், உர உற்பத்தி நிறுவனங்கள் மாதாந்திர உர விநியோகத் திட்டத்தின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரங்களை உரிய நேரத்தில் வழங்கவேண்டும். மேலும், சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து உர விற்பனை நிலையங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுபவா்களைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு மேல் உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்யாமல் இருக்கும் உர விற்பனை நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலா் சத்ய பிரதா சாகு, வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலா் வ.தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.