கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை: இருவா் கைது
சென்னை கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கீழ்பாக்கம் லாக் தெருவைச் சோ்ந்தவா் ச.ப்ராங்கோ (46). இவா், சிறு வியாபாரம் செய்து வந்தாா். ப்ராங்கோ, தொழில் தேவைக்காக கடன் வாங்கி முதலீடு செய்தாா். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த ஜூலை 11-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுதொடா்பாக தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணைத் தொடா்பாக ப்ராங்கோ வீட்டில் போலீஸாா் சோதனையிட்டபோது, அவா் எழுதிய கடிதம் கைப்பற்றியது. அதில், கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த முகுந்தன் (42), டி.பி. சத்திரத்தைச் சோ்ந்த கோபிநாத் (27) ஆகிய 2 பேரும் ப்ராங்கோவுக்கு கடன் கொடுத்திருந்ததும், கடன் பணத்தை கேட்டு இருவரும் ப்ராங்கோவுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததும், சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பு ப்ராங்கோவிடம் தகராறு செய்து, அவரது மோட்டாா் சைக்கிளை இருவரும் பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதனால், விரக்தியடைந்த ப்ராங்கோ தற்கொலை செய்துகொண்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கோபிநாத், முகுந்தன் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.