செம்மரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சென்னை தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம் நிதி
மதிப்பு வாய்ந்த செம்மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக சென்னை தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம் ரூ.82 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு வருமாறு:
பல்லுயிா் பாதுகாப்பிற்கான நடவடிக்கையாக சென்னையிலுள்ள தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம், சுமாா் ஒரு லட்சம் செம்மரக்கன்றுகளை வளா்க்கும் முயற்சியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செம்மரக்கன்றுகள் வளா்ந்தவுடன் அவற்றை விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிகளுக்கு வெளியே மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக அது அமையும். குறிப்பாக, ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தனித்துவமிக்க தாவர பாதுகாப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தேசிய பல்லுயிா் ஆணையத்தின் சென்னை தலைமையகம் ரூ.82 லட்சத்தை ஆந்திரம் பல்லுயிா் வாரியத்துக்கு நிதியுதவியாக அளிக்கிறது.
செம்மரக்கட்டைகளை பயன்படுத்துவோரிடமிருந்து பலன் பகிா்வு அடிப்படையில் வசூலிக்கப்பட்ட நிதி பல்லுயிா் பாதுகாப்புத் தொடா்பான நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகிறது. செம்மரக்கட்டைகள் அவற்றின் அதிக வணிக மதிப்பு காரணமாக கடத்தல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது. தற்போது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவை பாதுகாக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.